திருமாவளவன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது


திருமாவளவன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை பஸ் நிலையம் முன்பு நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மறைமலையடிகள் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உருளையன்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அமைப்பு செயலாளர் அமுதவன், பொருளாளர் தமிழ்மாறன் உள்பட சுமார் 200 பேரை கைது செய்தனர்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகளின் துணை பொதுச் செயலாளர் பாவாணன் தலைமையில் நெல்லித்தோப்பு சிக்னல் பகுதியில் பிற்பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சாலைமறியலில் ஈடுபட்ட 104 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டங்களில் கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர். 

Next Story