புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்


புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 21 March 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் அரசு பல் மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த இடங்கள் ஆண்டு தோறும் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரியில் முதுகலை மாணவர் சேர்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெறுவதாக அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் புகார் தெரிவித்து வந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் சென்னையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் புதுவை வந்தனர். அவர்கள் கோரிமேட்டில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரிக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.

சோதனையின் போது அரசு பல் மருத்துவக்கல்லூரி யில் உள்ள அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை நேற்று மாலை வரை நடந்தது. இதில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மோசடி தொடர்பாக அதிகாரி ஒருவர் சி.பி.ஐ. பிடியில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவையில் தொடர்ந்து முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story