வத்தலக்குண்டு அருகே, குடிநீர் கேட்டு 58-ம் கால்வாய் சுவரின் மீது ஏறி நின்று கிராம மக்கள் போராட்டம்


வத்தலக்குண்டு அருகே, குடிநீர் கேட்டு 58-ம் கால்வாய் சுவரின் மீது ஏறி நின்று கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே, குடிநீர் கேட்டு 58-ம் கால்வாய் சுவரின் மீது ஏறி நின்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே தெப்பத்துப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வைகை அணையிலிருந்து சிமிண்ட் கால்வாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதிக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கும் குடிநீர் வழங்குவதற்கு கடந்த 1998-ம் ஆண்டு 58-ம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக கால்வாய் அமைக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த பணி தற்போது தெப்பத்துப்பட்டி அருகேயுள்ள கீழ அச்சனம்பட்டி பகுதியில் நடந்து வருகிறது. தெப்பத்துப்பட்டி பகுதியில் உள்ள 2 கண்மாய்களுக்கு 58-ம் கால்வாயில் இருந்து தண்ணீர் செல்வதற்கு மதகு அமைக்கப்படும் என்று கிராம மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் அங்கு மதகு அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் 58-ம் கால்வாய் அமைக்கும் பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கு பணி செய்வதை தடுத்து நிறுத்தினர். பின்பு அந்த கால்வாயின் சுவர் மீது ஏறி நின்று குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த விருவீடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு 58-ம் கால்வாயில் இருந்து குடிநீர் வழங்குவதற்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலாகிரேஸ் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் கால்வாயில் மதகு அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் அளவீடு செய்து மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story