கடலூரில் 24-ந் தேதி அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் தண்டபாணி தகவல்
அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடலூரில் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
கடலூர்,
2017-18-ம் ஆண்டுக்கான அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அரசுத்துறை அலுவலர் பணியாளர்களுக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருகிற 24-ந் தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் ஓட்டம், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும், இறகுபந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய குழு போட்டிகளும் ஆண், பெண் இரு வருக்கும் தனித்தனியாக நடக்கிறது. கால்பந்து போட்டி ஆண்களுக்கு மட்டும் நடக்கிறது.
தடகளபோட்டியில் முதல் இடம் பிடிப்பவர்கள் மற்றும் குழுபோட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மட்டும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் அரசுத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு போட்டி நடைபெறும் நாள் அன்று தற்செயல் விடுப்பு அந்தந்த துறை தலைவர் மூலம் வழங்கப்படும்.
போட்டியில் மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறையை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் சீருடைப்பணியாளர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் ஆவர்.
எனவே வருகிற 24-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ள மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story