ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 735 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும், எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்தும், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்தும் மாவட்டம் முழுவதும் தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் தி.மு.க.வினர் கடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து கோஷம் எழுப்பியபடி பாரதிசாலை, பீச்ரோடு சந்திப்பில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்ட கே.எஸ்.ராஜா, மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாணவர் அணி அமைப்பாளர் நடராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுமார், மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சலீம், தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
அதேபோல் பண்ருட்டி கூட்டுரோட்டில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட அமைப்பு செயலாளர் திருமார்பன், நகர செயலாளர் செந்தில், மாநில நிர்வாகிகள் ஸ்ரீதர், சொக்கு என்கிற சொக்கலிங்கம், பாவாணன், பாரா முரளி மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
வடலூர் நான்குமுனை சந்திப்பு சாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நெல்லிக்குப்பத்தில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் தி.மு.க.வினர் பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் கார்த்திக், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் முஜிபுர்ரகுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ராஜரகிமுல்லா ஆகியோர் முன்னிலையில் அந்தந்த கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மந்தாரக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு தலைமையில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகமத்துல்லா முன்னிலையில் மறியலில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர். கீரப்பாளையம் கூட்டுரோட்டில் ஒன்றிய செயலாளர் அருண் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 14 பேர், பெண்ணாடம் பழைய பஸ்நிலையம் அருகில் நகர செயலாளர் ஆற்றலரசு தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர், வேப்பூர் கூட்ரோட்டில் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் தெற்குவீதி சந்திப்பில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரையும், சிதம்பரம் படித்துறை இறக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட 9 பேரையும் சிதம்பரம் போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே புவனகிரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் 25 பேரும், சிதம்பரம் கஞ்சிதொட்டி முனையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ. தொகுதி செயலாளர் முகமதுஅலி, நகர தலைவர் அப்துல்கபூர் மற்றும் த.மு.மு.க.வினர் 36 பேரும் மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.
ராமநத்தம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் தி.மு.க.வினர் 27 பேரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். புவனகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில் 17 பேரும், புதுப்பேட்டையில் தி.மு.க. நகர செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் 15 பேரும், அங்குசெட்டிப்பாளையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 பேரும், மங்களூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் தலைமையில் திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 25 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரும், சிறுபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மங்களூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் காசி உள்ளிட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி ஆர்ச் கேட் முன்பு தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 60 பேரும், விருத்தாசலம் பாலக்கரையில் தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் 75 பேரும் என மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்டதாக 735 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பாலஅறவாழி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story