சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 67,082 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.
கருப்பூர்,
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின்கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்று செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகம் மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகளில் சுமார் 1½ லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. பல்கலைக்கழக கலையரங்கில் நடந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, 380பேருக்கு முனைவர் பட்டமும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற 128 மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் என மொத்தம் 508பேருக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம், அதனை சார்ந்த உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைவுபெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் முடித்த சுமார் 66,574 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உறுதிமொழி வாசிக்க, அதை பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். விழாவில் மத்திய தோல் ஆராய்ச்சிமைய இயக்குனர் டாக்டர் பி.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசியதாவது:-
உலகின் மொத்த மக்கள் தொகையில் இந்தியா 17சதவீதத்தை கொண்டுள்ளது. இவர்களில் 65சதவீதம் பேர் 35வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் பொருட்டு பிரதமரின் வழிகாட்டுதல்படி, ‘ஜிக்யாசா‘ திட்டம் மத்திய அறிவியல் தொழில் அமைப்பு(சி.எஸ்.ஐ.ஆர்.) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு சி.எஸ்.ஐ.ஆர். உறுப்பு நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியை தத்தெடுத்து மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனையை புகட்டவேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றன.
இதேபோல ‘பாரம் 8000 ஏ‘ என்ற சூப்பர் கம்ப்யூட்டர் மேம்பட்ட கணினியை உருவாக்கும் மையத்தினால் (சி.டி.ஏ.சி.) உருவாக்கப்பட்டது. அது அக்கால கட்டத்தில் உலகின் இரண்டாவது அதிவேக கம்ப்யூட்டர் எந்திரமாக செயல்பட்டது. இன்று இந்தியா பீட்டா அளவுகோல்களில் சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைக்கிறது. இதுபோன்று பல்வேறு சாதனைகள இந்தியா அடையவேண்டும், அதற்காகவே பிரதமரின் ‘மேக் இன் இந்தியா திட்டம்‘ உற்பத்தி துறையில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. அதற்காக மாணவர்களின் திறனை தொழில் சார்ந்த பயிற்சிகளை நோக்கி செலுத்தவேண்டும். அதற்கு கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் இணைந்து செயலாற்றவேண்டும்.
இன்றைய பாடத்திட்டங்களும் தன்னிறைவு வளர்ச்சியை நோக்கமாக கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இந்த வளர்ச்சி சுற்றுச்சூழலின் எதிர்மறை விளைவுகளை உருவாக்குகின்றன. இதற்காக சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் ஆராய்ச்சிகளும் முக்கியத்துவம் பெறவேண்டும்.
முன்னதாக விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் வரவேற்புரையாற்றினார். அவர் பேசுகையில்,“பெரியார் பல்கலைக்கழகம் தேசிய கல்விநிறுவன தரவரிசைப்பட்டியலில் 85-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 3ஆண்டுகளில் மட்டும் ரூ.10கோடியே 31லட்சம் அளவிற்கு 63ஆய்வு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 4,500-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதேபோல பேராசிரியர்கள் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் இந்திய சமூக அறிவியல் கழகத்தின் 41-வது மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தினோம். ஆசிரியர் புலதொடர் சொற்பொழிவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.38 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.19 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களும், வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன“ என்றார்.
விழாவில் தமிழகஅரசின் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன், தேர்வாணையர் முத்துசாமி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story