சென்னையில் 2 போலீஸ்காரர்கள் தீக்குளிக்க முயற்சி: அதிகாரிகளை மிரட்டி ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம்
சென்னையில் தீக்குளிக்க முயன்ற 2 போலீஸ்காரர்கள், அதிகாரிகளை மிரட்டி ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேனி,
சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தேனி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர்களான கணேஷ், ரகு ஆகிய 2 பேரும் நேற்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிக்க முயன்ற 2 பேரும், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் மீது குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், நேற்று மாலையில் தனது அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் போலீஸ்காரர்கள் இரண்டு பேர் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதில் கணேஷ் (போலீஸ் எண்:318) என்பவர் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 24-10-2016 அன்று பணியிட மாறுதல் பெற்று தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியில் இணைந்தார். இவர், தொடர்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டதோடு, பணியை சரிவர செய்வது கிடையாது.
கடந்த 19-1-2017 அன்று உத்தமபாளையம் கோர்ட்டில் இருந்து கைதி வழிக்காவல் பணிக்கு சென்றார். பின்னர் மதுரை மத்திய சிறையில் கைதியை அடைக்க சென்ற போது கைதியை சிறைக்காவலர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்த கைதியிடம் கஞ்சா இருந்துள்ளது.
கஞ்சாவோடு கைதியை சிறைக்கு அழைத்து சென்ற குற்றத்துக்காக, சிறைக் கண்காணிப்பாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இவர், கடந்த 12-2-2017 அன்று தேனி அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல், கம்பத்தில் நடந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் போலீஸ் சீருடையில் பங்கேற்றார். இதுதொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல், கடந்த 19-12-2017 அன்று குச்சனூர் சனீஸ்வரர் கோவில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைத்த போது, எவ்வித முன்அனுமதியும் இன்றி, பொறுப்பாளரிடம் எதுவும் சொல்லாமல் பணி செய்யாமல் தன்னிச்சையாக ஆஜராகாமல் இருந்தார். இவ்வாறு அவருக்கு கொடுக்கப்படும் பணியை சரிவர செய்யாமல், தொடர்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டு வந்துள்ளார். அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ் படியாமல், அதிகாரிகளிடம் தகராறு செய்வதும், மிரட்டுவதுமாக இருந்து வந்துள்ளார்.
அதேபோல், போலீஸ்காரர் ரகு (போலீஸ் எண்:649) என்பவர் கடந்த 28-04-2017 அன்று சென்னையில் இருந்து தேனி மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் பெற்று வந்தார்.
இவர், அவசர பாதுகாப்பு பணிக்கு அழைக்கும்போது செல்போனை அணைத்து வைப்பதும், போலீஸ் குடியிருப்பில் குடியிருக்காமல் எந்த தகவலும் சொல்லாமல் வெளியூருக்கு சென்று தங்கி இருப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த 6-12-2017 அன்று இரவு பாபர் மசூதி இடிப்பு நாள் தொடர்பான அவசர பணிக்காக அழைத்தபோது, பணிக்கு ஆஜராகாமல் இருந்தார்.
போலீஸ்காரர்கள் கணேஷ், ரகு மற்றும் அவர்களுடன் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் ஒழுங்கீனமாகவும், பணிக்கு சரியாக வராத காரணத்தாலும் அவர்கள் மீது ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அளித்த அறிக்கையை, ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு எனக்கு பரிந்துரை செய்தார்.
நான், அதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தேன். அவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யின் உத்தரவுப்படி கணேஷ், ரகு உள்ளிட்ட 4 பேர் கடந்த 8-2-2018 அன்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி அவர்கள் 21-2-2018 அன்று தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தேனி மாவட்டத்தில் இருந்து செல்லமாட்டோம் என்று அதிகாரிகளை மிரட்டுவதும், தெரிந்தவர்கள் மூலம் போலீஸ் அதிகாரிகள் பற்றி அவதூறாக நோட்டீஸ்கள் ஒட்டுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
மக்கள் பணியாற்ற முன்வராதது, அவசர கால பணிக்கு அழைக்கும் போது பணிக்கு வராதது, ஒழுங்கீனமாக செயல்பட்டது போன்ற காரணங்களுக்காகவே அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மற்றபடி, அவர்கள் சொல்வது போன்ற பாகுபாடு எதுவும் கிடையாது. இங்கே எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story