பழனியில் அடிவாரம், ரெயில்வே பீடர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பழனியில் அடிவாரம், ரெயில்வே பீடர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

பழனி அடிவாரம், ரெயில்வே பீடர் பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பழனி, 

பழனி நகர், அடிவாரம், சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. புற்றீசல் போல் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து வருகின்றன. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றிய மீண்டும் அங்கு கடைகள் வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் பழனியில், பங்குனி உத்திர திருவிழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பழனி பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று பழனி ரெயில்வே பீடர் ரோடு, தபால் நிலையம் சந்து, காந்தி மார்க்கெட், அடிவாரம் போன்ற பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் ஜோதிக்குமார் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் மற்றும் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை தொடர்ந்து அசம்பாவித சம்பவம் நடக் காத வண்ணம் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story