வழக்கு விசாரணையின்போது விபரீதம்: அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து


வழக்கு விசாரணையின்போது விபரீதம்: அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 22 March 2018 4:15 AM IST (Updated: 22 March 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு விசாரணையின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்திற்கு சோதனை மேல் சோதனை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் போலீஸ் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு நேற்று முன்தினம் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்னொரு திடுக்கிடும் சம்பவம் அரங்கேறிவிட்டது.

அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சுப்பிரமணி, நேற்று முன்தினம் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். ஆனந்தன் என்பவர் செய்யது முனாப் என்பவர் மீது கொடுத்த புகார் மனு மீது அந்த விசாரணை நடந்தது. விசாரணையில், ஆனந்தனும் செய்யது முனாப்பும் கலந்துகொண்டனர். பெண் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடந்தது.

விசாரணையின்போதே, ஆனந்தனும், செய்யது முனாப்பும் போலீஸ் நிலையத்திலே சண்டை போட்டுக்கொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் அடிக்கப்பாய்ந்தனர். அவர்களை சப்-இன்ஸ்பெக் டர் சுப்பிரமணி கடுமையாக எச்சரித்து விலக்கிவிட்டார்.

அவர் எச்சரிக்கையையும் மீறி செய்யது முனாப் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆனந்தனை குத்துவதற்காக பாய்ந்ததாக தெரிகிறது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அதை கையால் தடுத்துள்ளார். அப்போது அவரது வலது கை மணிக்கட்டில் கத்திக்குத்து விழுந்துவிட்டது. அவர் கையில் இருந்து ரத்தம் கொட்டியது. கத்தியை தூக்கிய செய்யது முனாப் தப்பி ஓடப்பார்த்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மடக்கிப்பிடித்தார். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கத்திக்குத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கைது செய்யப்பட்ட செய்யது முனாப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story