குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா


குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா நடைபெற்றது. மாடுகள் முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் கடந்த 2-ந் தேதி காளை விடும் திருவிழாவிற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். ஆனால் காளை விடும் திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனைதொடர்ந்து காளை விடும் திருவிழா 21-ந் தேதி (நேற்று) நடைபெறும் என விழாக்குழுவினர் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரிபேட்டை பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்து குடியாத்தம் புதிய பஸ்நிலையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் பி.எஸ்.கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், செங்குட்டுவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போட்டி அறிவித்தபடி நடைபெறும் என தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் போலீசார், வருவாய்த்துறை அனுமதி மற்றும் கண்காணிப்பு இல்லாமல் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், பரதராமி, கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. காளைகள் முட்டியதில் 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் புவனேஸ்வரிபேட்டை பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story