கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் சுகாதார ஆய்வாளரிடம் 5 பவுன் நகைபறிப்பு


கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் சுகாதார ஆய்வாளரிடம் 5 பவுன் நகைபறிப்பு
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

பாணாவரம் அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் சுகாதார ஆய்வாளரிடம் 5 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பனப்பாக்கம்,

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 50). இவர், பாணாவரம் அருகே உள்ள புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் மல்லிகா, தனது கணவர் வீராசாமியுடன் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து பாணாவரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

பாணாவரத்தை அடுத்த மாங்குப்பம் தைலமர தோப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து 2 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் திடீரென மல்லிகா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் நகையை பறித்ததில் நிலைதடுமாறிய வீராசாமி, மல்லிகா ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. வீராசாமி லேசான காயமடைந்தார்.

இதைபார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மல்லிகா மட்டும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வீராசாமி, பாணாவரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 7-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி அவருடைய மனைவி பானுப்பிரியா அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story