வேட்டவலம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
வேட்டவலம் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
வேட்டவலம்,
வேட்டவலத்தை அடுத்த நாடழகானந்தல் கூட்ரோட்டில் இட்லி கடை வைத்திருப்பவர் கண்ணன். இவரது மனைவி சகுந்தலா (வயது 58). இவர், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக முன்புறமாக கதவை திறந்து வைத்துவிட்டு வாசல்படியில் தலையை வைத்து தூங்கினார்.
நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த சகுந்தலாவின் கழுத்தில் அணிருந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த சகுந்தலா சுதாரித்துக்கொண்டு தாலி சங்கிலியை கையால் இறுக்கமாக பிடித்து கொண்டார். நகையை பறிக்க முடியாததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் திடீரென சகுந்தலாவின் தலையை பிடித்து சுவரில் அடித்து தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சகுந்தலா மயக்கம் அடைந்தார்.
பின்னர் அதிகாலை 2 மணி அளவில் சகுந்தலா கண்விழித்து சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது சகுந்தலா ரத்த வெள்ளத்தில் இருந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story