‘கிளாசான’ குடும்பம், இது ‘கேஸ்ட்லஸ்’ குடும்பம்
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புனலூர் நகராட்சி பகுதியில் இந்த வித்தியாசமான குடும்பம் வசித்து வருகிறது.
ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட சமத்துவ சமுதாயத்திற்கு முன்னோடியாக விளங்கிக்கொண்டிருக்கிறது ஒரு கேரள குடும்பம். இந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் என்ன தெரியுமா? ‘ஜாதி இல்லை’ (Casteless). குடும்பத்தின் மூத்தவர்கள், இளையவர்களை வகை பிரிப்பதற்காக ‘ஜூனியர் ஜாதி இல்லை’(Junior Casteless), ‘சீனியர் ஜாதி இல்லை’(Senior Casteless) என்ற பெயரில் அழைத்து கொண்டிருக்கிறார்கள். தற்போது பேரக்குழந்தைகளுக்கு மார்டன் பெயர்களை வைக்க தொடங்கி இருந்தாலும் ‘ஜாதி இல்லை’ (Casteless) என்ற வாசகம் நிலையாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல, வசிக்கும் வீட்டின் பெயரும் ‘ஜாதி இல்லாத இல்லம்’(Casteless Home) என்ற அடையாளத்தை பெயர் பலகையில் தாங்கி நிற்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புனலூர் நகராட்சி பகுதியில் இந்த வித்தியாசமான குடும்பம் வசித்து வருகிறது. இரண்டு தலைமுறையாக இந்த பெயர் வழக்கத்தை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். “அதற்கான காரணம் என்ன?” என்ற கேள்விக்கு, வெவ்வேறு மதம், சமூகத்தை சேர்ந்தவர்கள் காதல் திருமண வாழ்க்கையில் இணைந்ததால் எதிர்கொண்ட சமூக சிக்கல்கள் பின்னணியாக படர்ந்திருக்கிறது. அதுபற்றி அந்த குடும்பத்தில் ஒருவரான ‘ஜூனியர் ஜாதி இல்லை’ சொல்வதை கேட்போம்.
“எனது பெற்றோர் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். கட்டுப்பாடான குடும்ப பின்னணியை கொண்டவர்கள். இருவரும் காதலித்த விஷயம் என் தாயாரின் குடும்பத்திற்கு தெரியவந்திருக் கிறது. அவர்கள் வீட்டுக்காவலில் அடைத்து வைத்துவிட்டார்கள். என் தந்தை கேரள ஐகோர்ட்டில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனு தாக்கல் செய்த பிறகே தாயார் விடுவிக்கப்பட்டிருக்கிறார்” என்கிறார், ஜூனியர். 43 வயதான இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
1973-ம் ஆண்டு இவருடைய பெற்றோர் கோர்ட்டு தலையிட்டதன் பேரில் இல்லற பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திரு மணத்தை பதிவு செய்வதில் சிக்கல் எழுந்திருக்கிறது. அதற்குரிய முறையான ஆவணங்கள் இல்லாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். கணவன்-மனைவியாக சுமார் 19 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தபோதிலும் அவர்களால் திருமண சான்றிதழ் பெற முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 1992-ம் ஆண்டில்தான் சம்பிரதாய நடைமுறையாக தங்கள் பந்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் ஓரளவு தங்கள் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகிவிட்டார்கள். தங்களை போல் தங்கள் தலைமுறை குழந்தைகளும் சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டு விடக்கூடாது என்ற நோக்கில் ஜாதி, மதத்தை தவிர்த்திருக்கிறார்கள். அதனை பெயரிலும் அடை மொழியாக பிரதிபலிக்கவைத்துவிட்டார்கள்.
இந்த தம்பதியரின் மூத்த சகோதரர் 1974-ம் ஆண்டு பிறந் திருக்கிறார். அவருக்கு பெயர் வைக்காமல் ‘சீனியர் ஜாதி இல்லை’ என்று அழைத்திருக்கிறார்கள். வக்கீலாக இருக்கும் ‘ஜூனியர் ஜாதி இல்லை’ 1975-ம் ஆண்டு பிறந்தவர். அடுத்ததாக 1983-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கு ‘ஷைன் ஜாதி இல்லை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் தங்களுக்கு பிறக்கப்போகும் பேரன், பேத்திகளுக்கு ‘ஜாதி இல்லை’ என்ற பெயரை தலைமுறை பெயராக சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படியே இந்த குடும்பத்தினரின் பெயர்களில் ‘ஜாதி இல்லை’ என்ற வாசகம் தவிர்க்கமுடியாததாக நிலைபெற்றுவிட்டது. பள்ளிக்கூட ஆவணங்களிலும் ஜாதி, மதம் ஆகிய இரண்டிலும் எதையும் குறிப்பிடாமல் தவிர்த்துவிடு கிறார்கள்.
மூத்தவர், எம்.பி.ஏ. படித்தவர். இவர் மனைவி சபீதாவுடன் துபாயில் வசித்து வருகிறார். தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு ஆல்பா ஜாதி இல்லை, இந்தியன் ஜாதி இல்லை என்று பெயரிட்டுள்ளார். இளையவரான வக்கீலும் தன்னுடைய இரு மகள்களுக்கு ஆக்னா ஜாதி இல்லை ஜூனியர், ஆல்பா ஜாதி இல்லை ஜூனியர் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
ஜூனியர், சீனியர், ஷைன் ஆகிய மூவரும் தங்களுடைய திருமண நிகழ்ச்சிகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்திருக் கிறார்கள். வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ இல்லை. தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story