குமரி மாவட்டம் வந்த ராமராஜ்ய ரதயாத்திரைக்கு வரவேற்பு


குமரி மாவட்டம் வந்த ராமராஜ்ய ரதயாத்திரைக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 22 March 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டம் வந்த ராதயாத்திரைக்கு மாவட்டத்தின் எல்லையான ஆரல்வாய்மொழியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, விசுவ இந்து பரி‌ஷத் ஆதரவு அமைப்பின் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரதயாத்திரை தொடங்கியது.

இந்த ரதம் கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையான செங்கோட்டைக்கு வந்தது. அங்கிருந்து விருதுநகர், மதுரை வழியாக நேற்றுமுன்தினம் மாலை ராமேசுவரத்தை அடைந்தது. நேற்று காலை அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி புறப்பட்டது.


இந்த ரதம் நேற்று மாலை 5.45 மணிக்கு குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழிக்கு வந்தது. அங்கு விசுவ இந்து பரி‌ஷத், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரதீய மஸ்தூர் சங்கம் போன்ற அமைப்புகள் சார்பில் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, காவி கொடி ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரதத்தில் வந்த சாந்த ஆனந்த மகரிஷி சுவாமிகள் ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில், விசுவ இந்து பரி‌ஷத் மாவட்ட தலைவர் குமரேச தாஸ், திருகோவில், திருமடங்கள் மாநில தலைவர் காளியப்பன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் நாஞ்சில் ராஜா, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயலாளர் முருகேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், ரதத்தை பார்வையிடுவதற்காக ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் சாலையின் இரு பக்கமும் திரண்டு இருந்தனர். தொடர்ந்து இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் முன்பு செல்ல ரதம் ஊர்வலமாக தோவாளை நோக்கி அழைத்து வரப்பட்டது. தோவாளை சென்றதும் அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ரதம் ஒழுகினசேரி வந்து நாகர்கோவிலை வந்தடைந்தது.

ரதயாத்திரையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


ரதயாத்திரையையொட்டி நாகர்கோவில்– ஆரல்வாய்மொழி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி செல்லும் வாகனங்கள் வடசேரி சந்திப்பு, ஆறாட்டு ரோடு, புத்தேரி, இறச்சகுளம், செண்பகராமன்புதூர், லாயம் வழியாக சென்றன. ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கம் போல் வாகனங்கள் விடப்பட்டன.

Next Story