வழக்குகளில் சிக்கி பிடிபட்ட வாகனங்கள் எரிந்து சேதம்


வழக்குகளில் சிக்கி பிடிபட்ட வாகனங்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்புறத்தில் வழக்குகளில் சிக்கி பிடிபட்ட ஆட்டோ, கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கில் தொடர்புடைய 3 ஆட்டோக்கள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அருகில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் மற்றும் போலீசார் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் 5–க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து அருகில் உள்ள வீடுகளில் இருந்து வாளி, குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து வாகனங்கள் மீது ஊற்றி கொழுந்துவிட்டு எரிந்த தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.

இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதில் வழக்கில் சிக்கிய 10–க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது.

வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அள்ளுவதற்கு பதில் தீவைத்து கொளுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story