பழங்குடியினர்களுக்கு மாட்டுக்கொட்டகை, கோழிப்பண்ணை அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்


பழங்குடியினர்களுக்கு மாட்டுக்கொட்டகை, கோழிப்பண்ணை அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 March 2018 5:00 AM IST (Updated: 23 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியினர்களுக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரியில் பழங்குடியினர்களுக்கு மாட்டுக்கொட்டகை, கோழிப்பண்ணை அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வசித்து வரும் காட்டு நாயக்கர், பனியர், பெட்ட குறும்பர் ஆகிய பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வில் முன்னேறுவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடலூர் செம்பளோ, முன்னகுன்னு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு மாட்டுக்கொட்டகை, கோழி பண்ணை, வீட்டு தோட்டம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடி, அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி அமைப்பது பற்றி கேட்டறிந்தார். மேலும் செம்பளோ பகுதியில் 125 பழங்குடியினர்களுக்கு கோழிப்பண்ணை அமைக்கவும், முன்னகுன்னு பகுதியில் 50 பழங்குடியினர்களுக்கு கோழிப்பண்ணை, மாட்டு கொட்டகை அமைக்கவும், பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி பகுதியில் காட்டு நாயக்கனூரில் கோழிப்பண்ணை, வீட்டு தோட்டம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இதற்காக தமிழக அரசின் சார்பில் நீலகிரி மாவட்டத்துக்கு பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ரூ.7 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நிதி ஒதுக்கி அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நெலாக்கோட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.5.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணி, கொழிச்சல் பனிக்கல் பகுதியில் ரூ.22.30 லட்சம் செலவில் நடைபெற்று வரும் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகைய்யன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கலைமன்னன், கூடலூர் தாசில்தார் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story