திருச்சியில் 5 வயது மகளை கொலை செய்துவிட்டு வங்கி மேலாளர் தற்கொலை


திருச்சியில் 5 வயது மகளை கொலை செய்துவிட்டு வங்கி மேலாளர் தற்கொலை
x
தினத்தந்தி 22 March 2018 11:15 PM GMT (Updated: 22 March 2018 7:16 PM GMT)

திருச்சியில் 5 வயது மகளை கொலை செய்துவிட்டு, வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மனைவியும் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலைக்கோட்டை,

திருச்சி கோட்டை சங்கரன்பிள்ளைரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமசுப்பிரமணியன் (வயது 35). இவர் சிண்டிகேட் வங்கியில் மேலாளராக இருந்தார். இவருடைய மனைவி ஆவுடையம்மாள் என்கிற கோமதி. இந்த தம்பதியினரின் மகள் ஆருத்ராஸ்ரீ(5). இவள் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். கோமதி வேலை நிமித்தமாக நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். நேற்று பகல் ராமசுப்பிரமணியன் வங்கியில் இருந்து பள்ளிக்குச் சென்று மகள் ஆருத்ராஸ்ரீயை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை. மாலை 4 மணி அளவில் கோமதி வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்களும் வந்து கதவை தட்டி பார்த்தனர். அப்போதும் கதவை திறக்காததால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ராமசுப்பிரமணியன் தூக்கில் தொங்கினார். அவர் அருகிலேயே சிறுமி ஆருத்ராஸ்ரீயும் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி கதறினார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், ராமசுப்பிரமணியன் மற்றும் ஆருத்ராஸ்ரீ ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கோட்டை போலீசார் இந்த சம்பவம் பற்றி கோமதியிடம் விசாரிக்க ராமசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு கோமதி விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

உடனே அவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், “ராமசுப்பிரமணியன் கடந்த ஓராண்டாக வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்ததாகவும், அவர் பலருக்கு வங்கி மூலம் கடன் அளித்து இருந்ததாகவும், ஆனால் குறிப்பிட்டபடி கடன்தொகையை வசூலிக்க முடியாததால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் மகளை கொலை செய்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்” என்று கூறப்படுகிறது.

ஆனாலும் குடும்பத்தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோமதியிடம் விசாரித்தால் தான், அதுபற்றிய முழு விவரம் தெரியவரும் என்பதால், போலீசார் கோமதியிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

5 வயது மகளை கொலை செய்துவிட்டு, வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story