வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் போக்குவரத்து பாதிப்பு


வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 March 2018 4:30 AM IST (Updated: 23 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் வைக்கோல்கள் சாலையில் விழுந்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நச்சலூர்,

நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி பாதியகாவல்காடு பகுதியில் உள்ள ராஜீ என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஒரு லாரியில் ஏற்றி கொண்டு நங்கவரம் வழியாக குளித்தலை தாளியம்பட்டிக்கு நேற்று மதியம் 1 மணியளவில் சிலர் சென்று கொண்டு இருந்தனர். லாரியை குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் அய்யநெறி பகுதியை சேர்ந்த வடிவேல்(வயது 30) ஓட்டி சென்றார். நங்கவரம் தெற்குப்பட்டி அருகே லாரி சென்றபோது லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் மீது மின்கம்பி உரசியுள்ளது. இதனால் வைக்கோலில் தீப்பிடித்து மளமளவென தீ பரவியது. இதனை அறிந்த லாரி டிரைவர் லாரியை உடனடியாக சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு காலி வயலில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். வைக்கோலில் பற்றிய தீ லாரி முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதையடுத்து குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்து ஏற்பட்ட லாரியை பார்வையிட்டனர். லாரி தீப்பிடித்து எரிந்த இடத்திற்கு அருகே பாதி வைக்கோல் கட்டுகள் சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து புகை வந்து கொண்டு இருந்தது. இதனால் நங்கவரம்-பெருகமணி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- இந்த பகுதியில் செல்லும் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story