திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு ‘திடீர்’ சாவு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு ‘திடீர்’ சாவு
x
தினத்தந்தி 23 March 2018 4:30 AM IST (Updated: 23 March 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு திடீரென நேற்று இறந்தது. அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ருக்கு என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு முன்பு யானை ருக்குவிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். யானை ருக்கு 1988-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பிறந்தது. 1995-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி யானை ருக்குவிற்கு 7 வயதான போது, மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை ருக்குவை வழங்கினார்.

இந்த யானை கடந்த 23 ஆண்டுகளாக தினமும் அதிகாலையில் கோவிலில் நடைபெறும் கோ பூஜை, கஜ பூஜையில் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பக்தர்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு திருமஞ்சன கோபுரம் அருகே உள்ள 5-ம் பிரகாரத்தில் யானை ருக்கு ஓய்வெடுக்க சென்றது. அப்போது, யானை அருகில் 4 நாய்கள் சண்டை போட்டு குரைத்து கொண்டு ஓடியது.

அதில் ஒரு நாய், யானையின் காலுக்கு அருகில் வந்து ஓடியுள்ளது. இதனால் பயந்து போன யானை ருக்கு வேகமாக ஓடி அங்கிருந்த இரும்பு தடுப்பு வேலியில் மோதிக் கொண்டது. இதையடுத்து யானைக்கு தண்ணீர் கொடுக்கும் போதும் நாயின் சத்தத்தை கேட்டு பயந்து அங்கிருந்த இரும்பு தகரத்தில் மோதி சரிந்து விழுந்தது. இதனால் யானை ருக்குவிற்கு இடது கண், துதிக்கை மற்றும் உடலில் ரத்தக் காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கால்நடை மருத்துவர் வெங்கடேஸ்வரன் வரவழைக்கப்பட்டு யானை ருக்குவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவு 9.45 மணி அளவில் அவர், யானைக்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

பின்னர் யானை ருக்கு அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்டது. இருப்பினும் யானை ருக்கு பயத்தில் முரண்டு பிடித்து உள்ளது. பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் யானை ருக்கு திடீரென உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை நகர மக்கள் நேற்று காலை ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் யானை ருக்குவின் உடலை கட்டி தழுவி மலர் மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் யானை ருக்குவிற்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மாட வீதியில் உள்ள வட ஒத்தவடை தெரு ஆஞ்சநேயர் கோவில் அருகில் யானை ருக்குவின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து யானை ருக்குவை நல்லடக்கம் செய்வதற்காக 2 கிரேன் எந்திரம் மூலம் கட்டி தூக்கி லாரியில் வைத்தனர்.

அப்போது, மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணி தலைமையிலான வனத்துறையினர் கோவில் யானையின் தந்தத்தை வெட்டி எடுக்க வேண்டும். அதன் பிறகு யானை உடலை அடக்கம் செய்யலாம் என்று கூறினர். இதனால் பக்தர்கள், வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சட்ட பூர்வமான நடவடிக்கை, இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினர் மற்றும் போலீசார் கூறினர்.

யானை ருக்குவிற்கு சிறிய தந்தங்கள் மட்டுமே இருந்து உள்ளது. எனினும் லாரியில் ஏற்றப்பட்ட யானை ருக்குவின் தந்தங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதையடுத்து யானை ருக்குவிற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அடக்கம் செய்வதற்காக யானை ருக்குவை திருமஞ்சன கோபுரம் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

பின்னர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் தயாராக தோண்டி வைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் யானை ருக்குவின் உடல் 2 கிரேன் எந்திரம் மூலம் தூக்கி இறக்கி வைக்கப்பட்டது. மேலும் விபூதி, மஞ்சள், உப்பு போன்றவற்றை யானையின் மீது போட்டனர். அதைத் தொடர்ந்து யானை ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Next Story