தலைமை செயலகத்தில் எலிகளை கொல்லும் பணியில் முறைகேடு


தலைமை செயலகத்தில் எலிகளை கொல்லும் பணியில் முறைகேடு
x
தினத்தந்தி 23 March 2018 4:13 AM IST (Updated: 23 March 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

தலைமை செயலகத்தில் எலிகளை கொல்லும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக ஏக்நாத் கட்சே குற்றம் சாட்டினார்.

மும்பை,

மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 லட்சத்து 19 ஆயிரத்து 400 எலிகள் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை குறிப்பிட்டது. இதைத் தொடர்ந்து மராட்டிய அரசு அந்த எலிகளை ஒழித்துகட்டும் ஒப்பந்த பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது.

இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஏக்நாத் கட்சே, தலைமைச் செயலகத்தில் எலிகளை கொல்வதற்கான பணியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மந்திராலயாவை சுற்றிலும் 3 லட்சத்து 19 ஆயிரத்து 400 எலிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த எலிகளை கொல்வதற்காக நியமிக்கப் பட்ட தனியார் நிறுவனம் வெறும் 7 நாட்களில் வேலையை முடித் துவிட்டதாக கூறியுள்ளது. இதற்கு வாய்ப்பே இல்லை.

இதன்படி பார்த்தால் அந்த நிறுவனம் ஒரு நாளைக்கு சுமாராக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளை கொன்றிருக்க வேண்டும். அதாவது நிமிடத்திற்கு சுமார் 31 எலிகள் கொல்லப்பட்டு இதனால் தினமும் 9 ஆயிரம் கிலோ அளவில் இறந்த எலிகள் சேகரிக்கப்பட்டு இருக்கும். மேலும் அவற்றை அப்புறப்படுத்த பெரிய லாரிகள் தினமும் மந்திராலயாவில் வந்து போயிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் நடைபெற்றதாக தெரிய வில்லை.

மேலும் கடந்த பிப்ரவரியில் விவசாயி ஒருவர் தனது கோரிக்கைகளை வலியுறுத்தி மந்திராலயா வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத் துக்கு எலிகளை கொல்வதற்கு விஷம் பயன்படுத்த அனுமதி உள்ளதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. மேலும் அவர்களுக்கு மந்திராலயாவில் எலி மருந்தை சேமித்து வைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தனர் என்பதும் தெரியவில்லை.

6 லட்சம் எலிகளை கொல்வதற்கு மும்பை மாநகராட்சிக்கு 2 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்கள் மட்டும் எவ்வாறு வெறும் 7 நாட்களில் வேலையை முடித்தார்கள். இந்த பணியில் முறைகேடு நடைபெற் றுள்ளது. அரசு இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story