நெல்லையில் இந்து முன்னணியினர் வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 53 பேர் கைது


நெல்லையில் இந்து முன்னணியினர் வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 53 பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2018 2:45 AM IST (Updated: 23 March 2018 8:55 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இந்து முன்னணியினர் வாகனங்களை பறிமுதல் செய்ததை கண்டித்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லையில் இந்து முன்னணியினர் வாகனங்களை பறிமுதல் செய்ததை கண்டித்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கக்கோரி அவர்கள் கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமராஜ்ய ரதம்

விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) ராமராஜ்ய ரதம் புறப்பட்டது. இந்த ரதம் பல்வேறு மாநிலங்களை கடந்து கடந்த 20–ந் தேதி நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்துக்குள் வந்தது. இந்த ரதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்து அமைப்பினர் ரத யாத்திரைக்கு வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குகள் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் ராமராஜ்ய ரதம் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்தது. அங்குள்ள கல்லூரியில் ரதத்துக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ரதத்தின் முன்பாக பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் ரதத்தின் அருகில் செல்ல விடாமல் தடுத்தனர்.

ஊர்வலமாக சென்றவர்கள் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளான டவுனை சேர்ந்த ராஜசெல்வம், இவருடைய மனைவி மாரியம்மாள், பாளையங்கோட்டை சேர்ந்த ராஜகோபால், பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரை போலீசார் நேற்று அதிகாலையில் அவரவர் வீடுகளுக்கு சென்று கைது செய்தனர். மேலும் ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்பட்ட 28 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கு இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை நெல்லை டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறும், இருசக்கர வாகனங்களை திரும்ப ஒப்படைக்குமாறும் வலியுறுத்தினர்.

கமி‌ஷனர் அலுவலகம் முற்றுகை

ஆனால், பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றால நாதன், பாரதீய ஜனதா கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட பொதுச்செலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிரம்ம நாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று பிற்பகல் தெற்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், தங்களை கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை கைது செய்தனர். அவர்களை 2 போலீஸ் வேன்களில் ஏற்றி ஐகிரவுண்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கோ‌ஷத்தால் பரபரப்பு

திருமண மண்டபத்தின் முன்பு வேனை நிறுத்திவிட்டு, அதில் இருந்தவர்களை மண்டபத்தில் அடைத்து வைக்கும் வகையில் கீழே இறங்குமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் வேனை விட்டு கீழே இறங்க மறுத்து விட்டனர்.

தங்களை சிறையில் அடைக்கக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வேனை விட்டு இறங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story