ஆலங்குளத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் போலீசார் விரட்டி பிடித்தனர்


ஆலங்குளத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் போலீசார் விரட்டி பிடித்தனர்
x
தினத்தந்தி 24 March 2018 2:00 AM IST (Updated: 23 March 2018 8:58 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் விசாரணை கைதி தப்பி ஓடினார். போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

ஆலங்குளம்,

ஆலங்குளத்தில் விசாரணை கைதி தப்பி ஓடினார். போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜன் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆலங்குளம் போலீசார் அம்பை ரோட்டில் உள்ள வாட்டர் டேங்க் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். உடனே போலீசார் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் ஆலங்குளம் அருகே உள்ள சின்னதம்பிநாடார்பட்டி மேல தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் தங்க செல்வம் (வயது 20) மற்றும் முருகன் மகன் கண்ணன் (23) என்பதும், அவர்கள் ராஜனுக்கு சொந்தமான ஆட்டை திருடி சென்றதும் தெரியவந்தது.

உடனே போலீசார் 2 பேரையும், ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது தங்கசெல்வம் திடீரென்று போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்கசெல்வத்தை விரட்டிச் சென்றனர். சிறிது தூரம் ஓடிய அவரை மடக்கி பிடித்தனர். இதனால் ஆலங்குளத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story