கியாஸ் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது


கியாஸ் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 24 March 2018 3:45 AM IST (Updated: 23 March 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டையில் கியாஸ் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் பெண் படுகாயம் அடைந்தார்.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை காமராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு வசித்து வருபவர் ஜோசப். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி எலிசா என்ற எலிசபத்(வயது 32). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று காலை ஜோசப், ஆட்டோ ஓட்டச்சென்று விட்டார். பிள்ளைகள் 3 பேரும் பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் எலிசா, தனது வீட்டை பூட்டி விட்டு வீட்டு வேலைகள் செய்வதற்கு சென்று விட்டார்.

வேலை முடிந்து மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்த எலிசா, முதல் மாடியில் உள்ள தனது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அவரது வீட்டின் சமையல் அறையில் உள்ள சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்தது.

இதை அறியாத எலிசா, சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். இதனால் வீடு முழுவதும் பரவி இருந்த கியாஸ் குபீரென தீப்பிடித்து எரிந்தது. எலிசா மீதும் தீப்பிடித்துக்கொண்டது. அவர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

கொருக்குபேட்டை, தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த எலிசாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story