குறை தீர்க்கும் கூட்டம் பெயரளவுக்கே நடத்தப்படுகிறது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு


குறை தீர்க்கும் கூட்டம் பெயரளவுக்கே நடத்தப்படுகிறது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 March 2018 3:45 AM IST (Updated: 24 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் குறை தீர்க்கும் கூட்டம் பெயரளவிலேயே நடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மாவட்ட அளவிலான விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஆட்சியர் ஆஷா அசித் முன்னிலை வகித்தார். அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தின்போது கொடுக்கப்பட்ட 314 புகார் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயிர் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவு சங்கங்களின் கடன் பிரச்சினைகள், நீரினால் ஏற்பட்ட பிரச்சினைகள் போன்றவை பற்றி கூட்டத்தில் ஆராயப்பட்டது.

சிங்கம்புணரி பகுதியில் பாலாறு-உப்பாறு சங்கமிக்கும் இடமான பட்ட வளிக்களம் மற்றும் கோவில் வாசல் எதிரில் உள்ள பாலாற்று படுகையில் தடுப்பணை கட்டுவதற்கு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை இரவு நேர பாராக செயல்படுவது குறித்து விவசாயி கரிகாலன் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து 43 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ வழங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இளையான்குடியைச் சேர்ந்த அய்யாச்சாமி என்ற விவசாயி கூறியதாவது:-

மாவட்ட தலைநகரான சிவகங்கையை தவிர்த்து கடந்த மாத குறை தீர்க்கும் கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. விவசாயிகள் வந்தும் கலெக்டர் கலந்து கொள்ளவில்லை. தற்போது சிங்கம்புணரியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டுள்ளார். மேலும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளாமல் கீழ் நிலை அதிகாரிகள் கலந்து கொண்டு அவர்கள் முறையான பதில் கூற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

சிவகங்கை மாவட்டத்தில் தான் இது போன்று விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் பெயரளவில் நடத்தப்படுகிறது. இதை மாற்ற கலெக்டர் முயற்சி எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு முறையாக வறட்சி நிதி வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த விவசாயி கூறினார். மேலும் சில விவசாயிகளும் குறை தீர்க்கும் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினர். 

Next Story