மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயார், தங்கதமிழ்செல்வன் பேட்டி


மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயார், தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 24 March 2018 4:15 AM IST (Updated: 24 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக தங்கதமிழ்செல்வன் கூறினார்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியம் தெப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 101-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகஜோதி தலைமை தாங்கினார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பள்ளியின் நூற்றாண்டு விழா நுழைவு வாயிலை திறந்து வைத்தார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பின்னர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலதாமதம் செய்கிறது. எனவே எங்களது துணை பொதுச்செயலாளர் தலைமையில் சென்னையில் நாளை (அதாவது இன்று) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மத்திய அரசின் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். ஆட்சியை கவிழ்ப்பது நோக்கமல்ல. குரங்கணி தீ விபத்து பற்றி ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்கூட்டியே தெரிந்த நிலையிலும், தனது மகனுக்கான விழாவில் அவர் கலந்து கொண்டார். இதற்காக 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 20 பேரின் மரணத்திற்கு 4 அமைச்சர்களும் பதில் சொல்ல வேண்டும். சென்னையில், தேனியை சேர்ந்த போலீசார் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.

தமிழுக்கு பாடுபட்ட, ஈழத் தமிழர்களுக்காக முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட நடராஜனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழ் மரபு. அதைக்கூட நடராஜனால் பலனடைந்த அமைச்சர்கள் செய்யவில்லை. பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால தாமதம் செய்வதில் நியாயமில்லை. இதனால் நாங்கள் பதவியில் இல்லாததால் எம்.எல்.ஏ. நிதி வீணாக உள்ளது, என்றார்.

பேட்டியின் போது ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலசந்திரன், மரிக்குண்டு செல்வம், வெற்றி, நிர்வாகிகள் பொன்முருகன், பாக்கியராஜ் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story