கியாஸ் சிலிண்டர் லாரியை சிறைபிடித்து போராட்டம்


கியாஸ் சிலிண்டர் லாரியை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 9:55 PM GMT (Updated: 23 March 2018 9:55 PM GMT)

ஆரணி அருகே கியாஸ் சிலிண்டர் கூடுதல் விலைக்கு விற்றதால் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி,

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆரணியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சியில் இருந்து லாரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலையில் வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய லாரியில் கியாஸ் சிலிண்டர் வந்தது.

இதனையடுத்து ஏஜென்சியின் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்தனர். ஒரு கியாஸ் சிலிண்டர் 718 ரூபாய். ஆனால் ஏஜென்சியின் ஊழியர்கள் 730, 740 ரூபாய் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்த லாரியை சிறைபிடித்து கோஷமிட்டனர்.

இதுகுறித்து கியாஸ் ஏஜென்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கியாஸ் ஏஜென்சியின் நிர்வாகத்தினர் பில்லில் குறிப்பிட்டுள்ள 718 ரூபாய் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய ஊழியர்களிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் சிறைபிடிக்கப்பட்ட லாரியை விடுவித்தனர். பின்னர் 718 ரூபாய் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story