விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கலெக்டர் பேச்சு


விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2018 3:50 AM IST (Updated: 24 March 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற மாணவ - மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவை இணைந்து பிற்படுத்தப்பட்டோர் விடுதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நடத்தியது. அரசு கலைக்கல்லூரி முதல்வர் மு.சின்னையன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானு வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிக்கும் போதே போட்டி தேர்வுகளில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தற்போது பெரும்பாலான பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கல்லூரியில் படிக்கும் போதே நமது வாழ்க்கை வழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும். சிலர் கல்லூரி படிப்பு முடித்த பின்னர் வெளியே சென்றவுடன் பல்வேறு போட்டிகளால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு மட்டும் போட்டி தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வேலை கிடைத்துவிட்டது என்று சாதாரணமாக நினைத்து விடுகிறார்கள். வேலையிலும் போட்டிகள் உள்ளன. அதனால் மாணவர்கள் கல்லூரி காலங்களிலேயே போட்டி தேர்வுக்கு தங்களை தகுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story