சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரசார் மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 95 பேர் கைது


சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரசார் மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 95 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 24 March 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

குழித்துறையில் சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை,

விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பல சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், சாலையை சீரமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை குழித்துறை சந்திப்பில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், ரவிசங்கர், மாவட்ட துணைத்தலைவர் பால்மணி, ஜோதிஷ்குமார் உள்பட ஏராளானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைகளை சீரமைக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 95 பேரை களியக்காவிளை போலீசார் கைது  செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story