திருப்பூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
திருப்பூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உடு மலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தின் முன்புறம் தமிழக அரசின் சாதனை விளக்க 2 நாள் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமார், சு.குணசேகரன், கரைப்புதூர் ஏ.நடராஜன், உ.தனியரசு, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கண்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமான விலையில்லா அரிசி வழங்குதல், இல்லத்தரசிகளுக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்குதல், கிராமப்புற மகளிருக்கு ஆடுகள் மற்றும் கறவை பசுக்கள் வழங்குதல், படித்த ஏழைபெண்களுக்கு திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய விளக்க புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல், கோவில்களில் அன்னதான திட்டம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்டு, புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், அம்மா உணவகம், பசுமை வீடுகள் திட்டம் உள்பட ஏராளமான திட்டங்கள் குறித்த விளக்கப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தின் ஓராண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சாதனை மலர் புத்தகத்தை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story