கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலம்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 24 March 2018 10:00 PM GMT (Updated: 24 March 2018 7:07 PM GMT)

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் ஊதியக்குழு அறிவிப்பில் மறுக்கப்பட்ட 21 மாத கால நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் தொடங்கிய ஊர்வலத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். ஊர்வலத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மதலைமுத்து ஆர்ப்பாட்ட உரையாற்றினார். முன்னதாக ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனை வாசலில் முடிவடைந்தது. அங்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கன்னையன் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, ‘தமிழக அரசு மாநில உயர்மடட குழு உறுப்பினர்களை அழைத்து கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் மே மாதம் 8-ந்தேதி லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கிய முற்றுகை போராட்டம் நடைபெறும்‘ என்றார். 

Next Story