ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு வணிக நிறுவனங்களின் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு


ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு வணிக நிறுவனங்களின் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 25 March 2018 4:00 AM IST (Updated: 25 March 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

வணிக நிறுவன வழக்கு விசாரணையின்போது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக முடிக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேசினார்.

மதுரை,

மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜுடிசியல் அகாடமியில் வணிக சிக்கல்களுக்கான தேசிய கருத்தரங்கு நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி உதய் உமேஷ் லலித் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

வணிக நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது அவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு விரைவாக வழக்கை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் சரியான தீர்ப்பை வழங்குவதிலும் உறுதியாக இருப்பது அவசியம்.

வணிகச்சிக்கல்கள் தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதில் ஏற்படும் சிக்கல்கள் என்ன, அதை விசாரித்து முடிப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிக நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. எனவே வணிக சிக்கல்களைத் தீர்ப்பதில் உள்ள வேகத்தின் மூலம் தான் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவிட முடியும். ஆனால், நம் நாட்டில் ஒரு வணிக நிறுவனம் தொடரும் வழக்குகளில் தீர்வு காண குறைந்தது 4 ஆண்டு வரை ஆகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்வதில் தயக்கம் காட்டும் நிலை ஏற்படலாம்.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் வணிகச்சிக்கல்களை தீர்ப்பதற்கு சிறப்பு சட்டங்கள் உள்ளன. இதில் குறிப்பாக துபாய், சிங்கப்பூரில் வணிக நிறுவனங்கள் தொடரும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அந்த நிறுவனங்கள் சார்பில் வெளிநாட்டு வக்கீல்களும் ஆஜராகி வாதாடலாம். இந்த நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்.

மேலும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளைத் தவிர, நிலுவையில் உள்ள வழக்குகளை வணிகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகளுக்கு மாற்றினால் அவற்றை விரைந்து விசாரிக்க முடியும் என்பது என் கருத்து. எனவே நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வணிகச் சிக்கல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடிப்பதில் நீதிபதிகள், வக்கீல்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நீதிபதி எஸ்.மணிக்குமார் வரவேற்றார். நீதிபதி ஹூலுவாடிரமேஷ், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆகியோர் பேசினார்கள்.

முடிவில் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நன்றி கூறினார். சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஆர்.சக்திவேல், தமிழ்நாடு ஜுடிசியல் அகாடமி இயக்குனர் ஜி.சந்திரசேகரன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கு இன்றும் தொடர்ந்து நடக்கிறது. 

Next Story