கோவை மாவட்டத்தில் 765 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது


கோவை மாவட்டத்தில் 765 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 March 2018 2:45 AM IST (Updated: 25 March 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 765 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு நாளை (திங்கட்கிழமை) வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி மொத்தம் 4 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கூட்டுறவு சங்கங்களின் கோவை சரக துணை பதிவாளர், பொள்ளாச்சி சரக துணை பதிவாளர், செயற்பதிவாளர், பால்வளம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வீட்டுவசதி, தொழில் வணிகத்துறை, கதர் கிராமம் தொழில் வாரியம், பனைபொருள் வளர்ச்சி வாரியம், வேளாண்மைதுறை, மாவட்ட சமூகநலத்துறை, பட்டுவளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, மீன்வளம் ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 192 சங்கங்களுக்கும், 2-ம் கட்டமாக 187 சங்கங்களுக்கும், 3-ம்கட்டமாக 186 சங்கங்களுக்கும், 4-ம் கட்டமாக 200 சங்கங்களுக்கும் ஆக மொத்தம் 765 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதில் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடுபவர்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடுபவர்கள் வருகிற 31-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி நடைபெறுகிறது. 3-ம் கட்ட தேர்தலில் போட்டியிடுபவர்கள் அடுத்த மாதம் 9-ந்தேதி மனுதாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் 10-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. 4-ம் கட்ட தேர்தலில் போட்டியிடுபவர்கள் அடுத்த மாதம் 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும்.

முதல்கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவு 3-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதில் தலைவர் மற்றும் துணை தலைவருக்கு 7-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

2-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவு 9-ந்தேதி வெளியிடப்படுகிறது. தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் 13-ந்தேதி நடைபெறுகிறது.

3-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 16-ந்தேதியும், முடிவுகள் 17-ந்தேதியும் வெளியிடப்படுகிறது. தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் 21-ந்தேதி நடைபெறுகிறது. 4-ம் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தல் முடிவு 24-ந் தேதி வெளியாகும். தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் 28-ந்தேதி நடைபெறுகிறது. 

Related Tags :
Next Story