மாவட்டம் முழுவதும் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும், கலெக்டரிடம், அய்யாக்கண்ணு மனு


மாவட்டம் முழுவதும் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும், கலெக்டரிடம், அய்யாக்கண்ணு மனு
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கலெக்டரிடம், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்.

திண்டுக்கல்,

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திண்டுக்கல்லில் கலெக்டர் டி.ஜி.வினயை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் கொடுக்காமலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் விளை நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது.

அவ்வாறு விற்றால் அந்த நிலங்களை, தனியார் நிறுவனத்தினர் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிடும். இந்தநிலை ஏற்படாமல் இருக்க மாநில அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆறுகளில் தடுப்பணை

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக் காகவும் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசியமயமாக்கி, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு திருப்பிவிட வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.5, ரூ.7, ரூ.10 என காசோலை வழங்கப்பட்டுள்ளது. இது என்ன வகையில் நியாயம். இதனால் தங்களுடைய அதிகார வரம்புக்கு உட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 

Next Story