காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக 9 பேர் குழுவை மத்திய அரசு அமைக்கிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக 9 பேர் குழுவை மத்திய அரசு அமைக்கிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக 9 பேர் கொண்ட குழுவை மத்தியஅரசு அமைக்கிறது என்று திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

செம்பட்டு,

காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி 9 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் 5 பேர் நிரந்தர உறுப்பினர்களாகவும், 4 பேர் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிரதிநிதிகளாக இருப்பார்கள். மேலும் அதற்கான ஆயத்த பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தமிழகத்தின் உரிமை நிச்சயம் பாதுகாக்கப்படும் என்பதன் அறிகுறி தான். தமிழக மக்கள் மீது அனைவருக்கும் அக்கறை இருக்கிறது. இதனை சிலர் வேண்டுமென்றே அரசியல் ஆக்குகிறார்கள். கர்நாடக முதல்-அமைச்சரும், கர்நாடக எம்.பி.க்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்கிறார்கள்.

காவிரி விவகாரம் தொடர்பாக அவர்களிடம் ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் கேள்வி எழுப்ப வேண்டியது தானே?. எல்லாவற்றையும் விட வேடிக்கை என்னவென்றால் திருநாவுக்கரசர் போராட்டம் நடத்தப்போவதாக சொல்கிறார். யாரை எதிர்த்து போராட்டம் நடத்த போகிறார்? கர் நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை எதிர்த்தா? அல்லது காங்கிரஸ் எம்.பி.க்களை எதிர்த்தா?. என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,950 கோடியை நிறுத்தி வைத்துள்ளதாக சொல்வது தவறு. உள்ளாட்சி அமைப்பு இருந்தால் தான் அந்த நிதி சரியாக போய் சேரும். உள்ளாட்சி அமைப்பு என்பதே அதற்காக தான், ஆக உள்ளாட்சி அமைப்பே இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது.

ஏப்ரல் மாதத்திற்குள் தொகுதி வரைமுறை எல்லாம் முடிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்ற தகவல்கள் வந்திருக்கிறது. அதனால் உள்ளாட்சி தேர்தலை விரைவில் எதிர்பார்க்கலாம்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டு நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அதேநேரத்தில் சில குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் பயிர்பாதுகாப்பு திட்டம் குறித்து விவசாயிகளிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை.

காவல்துறையில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிகிறது. இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்கள் பணிச்சுமையினால் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். காவலர்கள் தங்களது கோரிக்கைகள் பற்றி அரசுக்கு தெரிவிக்க அவர்களுக்கென்று ஒரு அமைப்பு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டையில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பேத்கர் சட்ட பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரை தரக்குறைவாக விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க.வினர் மீது வன்முறை நடந்தால் யாரும் குரல் கொடுப்பதில்லை. அதனால் எங்களை தற்காத்து கொள்ளவே பா.ஜ.க.வினர் மீது கை வைத்தால் கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்து பேசினேன்.

ரஜினி, கமல்ஹாசன் உள்பட யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வந்த பிறகு அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே கருத்து கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story