பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டியில் பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவரங்குளம்,

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்ததால், இந்த சாலையில் புதுக்கோட்டையில் இருந்து கேப்பரை வரை புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் ஓரத்தில் மேட்டுப்பட்டி இந்திரா நகர் பகுதியில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. தற்போது இந்த பள்ளியின் முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்துடன் சென்று வருகின்றன.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை இந்திராநகரில் உள்ள பள்ளியின் முன்பு, சாலையில் உடனடியாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும் எனக்கூறி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் தமிழ்மணி மற்றும் கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது குறித்து மனு அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story