பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது


பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2018 3:45 AM IST (Updated: 25 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். குடிக்க பணம் தராததால் கொலை செய்ததாக பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்தார்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் பென்னி (வயது 38). இவர் மொளச்சூர் சமுதாய கூடம் அருகில் தங்கியிருந்து பெயிண்டு அடிக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் ஒரு வாரத்திற்கு முன்னர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னியை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் பென்னியை கொலை செய்தது பழஞ்சூரை சேர்ந்த ரூபன் (வயது 30), மொளச்சூரை சேர்ந்த அரி (30), வெங்கடேசன்(29) என்பது தெரியவந்தது. ரூபன் போலீசாரிடம் கூறியதாவது.

நாங்களும் பென்னியும் நண்பர்கள். நாங்கள் பெயிண்டு அடிக்கும் வேலை செய்து வந்தோம். இரவில் ஒன்றாக மது குடிப்போம். சம்பவத்தன்று எங்களிடம் மது அருந்த பணம் இல்லை. பென்னியிடம் பணம் கேட்டோம். அதற்கு அவன் பணம் இல்லை என்று கூறிவிட்டு வேறு நபருடன் மது குடித்தான். இதை பார்த்த உடன் ஆத்திரத்தில் நான் எனது நண்பர்கள் வெங்கடேசன், அரி ஆகியோருடன் பென்னியை வெட்டிக்கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story