பழனி திருஆவினன்குடி கோவில் அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு


பழனி திருஆவினன்குடி கோவில் அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 25 March 2018 3:45 AM IST (Updated: 25 March 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

பழனி திருஆவினன்குடி கோவில் அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பழனி,

பழனி திருஆவினன்குடி கோவில் அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்துவதற்காக 11 ஊர், 24 நாள் மனை சாந்தகுல சவுமிய நாராயண கவராயர் சமூகத்தினரின் மண்டபத்தில் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் பழமையான கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சவுமிய நாராயண கவராயர் சமூகத்தின் அறங்காவலர் பாலகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் ஸ்தபதி, கார்த்தி, பழனியாண்டவர் கலை பண்பாட்டுக்கல்லூரி பேராசிரியர்கள் அசோகன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:

மண்டபம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இருந்து 18-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக சீரமைக்கப்பட்டுள்ளது என்பதும், அதில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான எந்திர கல்வெட்டு ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த கல்வெட்டின் காலம் 17-ல் இருந்து 18-ம் நூற்றாண்டுக்குள் இருக்கும் என்பது தெரியவருகிறது. கல்வெட்டில் 9 சதுரக்கட்டங்கள் அமைத்து, அதில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை எப்படிக் கூட்டினாலும் 15 என்ற எண் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. தற்கால ‘சுடோகோ’ விளையாட்டை போன்று இந்த அமைப்பு முருகனின் எந்திர எண்ணான 6 ஐ குறிக்கிறது. ஒவ்வொரு கடவுளுக்கும் உள்ள எந்திர எண்களை போல முருகனை ஆறுமுக கடவுள் என்பதை குறிக்கும் வகையில் எந்திர எண் 6 வருமாறு தமிழ் எண்கள் எந்திர கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பங்குனி உத்திர திருவிழாவின் 6-ஆம் நாள் அன்று ஆறுமுக கடவுளான முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை குறிக்கும் வகையில் எண்கள் அமைக்கப்பட்டு இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் மண்டபத்தின் கூரைப்பகுதியில் நாட்டிய பெண்களின் சிற்பங்களும், தூண்களில் மன்னர்களின் சிற்பங்களும் மண்டப வெளிக் கூரையில் யாழி வடிவங்களும் மண்டபத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story