புதுச்சேரி அருகே ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் சாவு


புதுச்சேரி அருகே ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் சாவு
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அருகே ஏரியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாகச் செத்தனர். குளித்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. இவருடைய மகன் காமேஷ் (வயது 14). இவன் புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமியின் மகன் மோகன் குமார் (13), இவன் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு அய்யனாரின் மகன் குமரகுரு (11), இவன் விநாயகபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவர்கள் 3 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி ஒன்றாக விளையாடி வந்தனர். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று பகல் இவர்கள் 3 பேரும் 2 சைக்கிள்களில் கிளியனூரை அடுத்த கேணிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றனர்.

அங்கு அவர்கள் கழற்றி வைத்துவிட்டு ஏரியில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அப்போது 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் அவர்கள் சேற்றில் சிக்கியதால் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உதவி கேட்டு அலறினர். ஆனால் அவர்களது சத்தம் வெளியே கேட்கவில்லை. இந்தநிலையில் சிறிது நேரத்தில் காமேஷ், மோகன்குமார் மற்றும் குமரகுரு 3 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாகச் செத்தனர்.

இந்தநிலையில் நீண்டநேரமாகியும் மகன்கள் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் தேடத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் 3 பேரும் ஏரியை நோக்கி சைக்கிள்களில் சென்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். உடனே பதறியடித்துக் கொண்டு மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேணிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றனர்.

அங்கு 3 மாணவர்களின் உடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை ஏரிக்கரையில் கிடப்பதையும், அவர்கள் வந்த சைக்கிள்கள் நிற்பதையும் பார்த்தனர். உடனடியாக கிராம மக்கள் சிலர் ஏரியில் இறங்கி மாணவர்களை தேடினார்கள்.

அப்போது அந்த ஏரியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர் கதறித் துடித்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்கள் காமேஷ், மோகன்குமார் மற்றும் குமரகுரு ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் விநாயகபுரம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story