மேட்டூரில் பயங்கரம்: பட்டதாரி வாலிபர் வெட்டிக்கொலை
மேட்டூரில் பட்டதாரி வாலிபரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
மேட்டூர்,
சேலம் மாவட்டம், மேட்டூர் குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுடைய ஒரே மகன் கண்ணன்(வயது 27), பி.எஸ்சி. பட்டதாரி. கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார் என்பதால், கண்ணன் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு குள்ளவீரன்பட்டி மேல்தெருவிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் வழிமறித்து நிறுத்தி தாக்க முற்பட்டனர். இதனால் அச்சம் அடைந்த கண்ணன், தனது மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடினார்.
இதனிடையே அந்த பகுதியில் உள்ள ஆள் இல்லாத குடிசைக்குள் புகுந்து கண்ணன் தாழ்ப்பாள் போட்டு பூட்டிக்கொண்டார். இருப்பினும் அவரை விரட்டிச்சென்ற 2 பேரும், அந்த பூட்டை உடைத்து குடிசைக்குள் புகுந்தனர். அங்கு பதுங்கி இருந்த கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்து போன கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கண்ணனின் தாயார் வசந்தா மேட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும், எனது மகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. எனவே கார்த்தி தரப்பினர் எனது மகனை கொலை செய்து இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா? தப்பி ஓடிய கொலையாளிகள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
மேட்டூரில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story