காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றம் முன்பு விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றம் முன்பு விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றம் முன்பு விவசாயிகள் நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை வருகிற 29-ந்தேதிக்குள் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு நாளை(திங்கட்கிழமை) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து விவசாயிகள் நேற்று டெல்லிக்கு புறப்பட்டனர்.

முன்னதாக ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையம் சென்றனர். ஊர்வலத்தின்போது ‘மத்திய அரசே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்காதே’, ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்காதே’, ‘அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்காதே’ என கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு வருகிற 29-ந்தேதி கெடுவிதித்தும், அதுகுறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டிக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

மன்னார்குடியில் இருந்து நேற்று மாலை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர். இவர்களது வருகையை முன்பே அறிந்த போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்திலேயே அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விவசாய குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர். 

Next Story