கடன் தொல்லையால் பரிதாபம்: மகன், மகளுக்கு எலி மருந்தை கொடுத்து பெண் தற்கொலை முயற்சி


கடன் தொல்லையால் பரிதாபம்: மகன், மகளுக்கு எலி மருந்தை கொடுத்து பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 25 March 2018 4:45 AM IST (Updated: 25 March 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் கடன் தொல்லையால் மன வேதனை அடைந்த பெண் ஒருவர் தனது மகன், மகளுக்கு எலி மருந்தை கொடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆபத்தான நிலையில் உள்ள அந்த பெண் மற்றும் அவருடைய மகன், மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ஆலமுத்து. இவருடைய மனைவி தமிழரசி(வயது 30). இவர்களுடைய மகன் ஷியாம் (11). ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். மகள் மனிஷா(9). நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

தமிழரசியும், ஆலமுத்துவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆலமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். உடல் நிலை சரியில்லாததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆலமுத்து இறந்து விட்டார். தற்போது தமிழரசி ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.

மகன், மகளுக்கு விஷம்; பெண் தற்கொலை முயற்சி

கணவருடைய மருத்துவ செலவுகளுக்காக தமிழரசி பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தமிழரசியை தொந்தரவு செய்து வந்தனர். கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த தமிழரசி நேற்று தனது குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் ஆபத்தான நிலையில் இருந்த தமிழரசி மற்றும் அவருடைய குழந்தைகள் உள்பட 3 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழரசி எலி மருந்தை சாப்பிடுவதற்கு முன்பாக “வாட்ஸ்-அப்பில்” ஒலிப்பதிவு குறுஞ்செய்தியை(ஆடியோ மெசேஜ்) அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஒருவருக்கு அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story