புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம்


புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி தர்மபுரியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் ஊர்வலம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பொன்ரத்தினம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் தங்கராஜ், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் சிவக்குமார், அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகி ராஜ்குமார் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலம் கடை வீதி, கந்தசாமி வாத்தியார் தெரு வழியாக தர்மபுரி தொலைபேசி நிலையம் வந்தடைந்தது. அங்கு கோரிக்கை விளக்க பொதுக்கூடடம் நடைபெற்றது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை ரத்து களைய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர், ஊராட்சி செயலாளர், அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பகுதி நேர ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இந்த கோரிக்கை விளக்க ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராஜராஜன், சிவப்பிரகாசம், வீரமணி, புகழேந்தி, இளங்குமரன், நெடுஞ்செழியன், கவிதா உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் நன்றி கூறினார். 

Next Story