4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்– அரசு ஊழியர்கள் பேரணி


4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்– அரசு ஊழியர்கள் பேரணி
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் பேரணி நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள்– அரசு ஊழியர்கள் (ஜாக்டோ– ஜியோ) சார்பில் பேரணி தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து தொடங்கிய பேரணிக்கு ஜாக்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிட்டு தலைமை தாங்கினர். ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெங்கசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பெருஞ்சித்ரனார் பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து வகையான ஆசிரியர்கள்– அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் 7–வது ஊதியக்குழு இதுவரை அமல்படுத்தப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ள கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.


சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்புற நூலகர், பகுதிநேர மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள உள்ளிட்டோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி தற்போது காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களது தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை நியமன முதல்நாள் பணிவரன்முறை செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வஞ்சிக்கப்பட்ட 21 மாதத்திற்கான ஊதியக்குழு நிலுவைத்தொகையினை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பேரணி ராசாமிராசுதார் மருத்துவமனை சாலை, அண்ணாசிலை வழியாக பனகல் கட்டிடத்தை சென்றடைந்தது. இதில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில தலைவர் உதயசூரியன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் பேசினர். முடிவில் ஜாக்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார்.

Next Story