பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2018 3:30 AM IST (Updated: 25 March 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தின் (ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு) சார்பில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து ஊர்வலமாக வந்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகபெருமாள், மாயகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்ரமணியன், ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க தலைவர் ரவிசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கோவிந்தன் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி செயலாளர், தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாதத்திற்கான நிலுவை தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக கோட்டை மைதானத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக கலெக்டர் அலுவலகம் அருகில் வரை ஊர்வலம் நடந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தும் வகையில், அரசின் கவனத்தை ஈர்க்க ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மே மாதம் 8-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story