குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்


குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருகில் உள்ள வேட்டவலம் சாலை கீழ்நாத்தூர் பகுதியில் புதிதாக வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த வணிக வளாகத்தின் மீது தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து அதனை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். “செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சினால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, செல்போன் டவரினை குடியிருப்பு பகுதியில் அமைக்கக் கூடாது” என்று கலெக்டரிடம் மனு அளித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு அங்கு இறக்கப்பட்டன.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மாதர் சங்கத்துடன் இணைந்து நேற்று மாலை 5.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 45 நிமிடத்திற்கு மேல் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது “எங்கள் பகுதியில் இந்த செல்போன் டவர் வைக்கக் கூடாது” என்றனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

Next Story