பெங்களூருவில் நடிகர் ரஜினிகாந்த் படித்த அரசு பள்ளி நவீன வசதிகளுடன் புனரமைப்பு


பெங்களூருவில் நடிகர் ரஜினிகாந்த் படித்த அரசு பள்ளி நவீன வசதிகளுடன் புனரமைப்பு
x
தினத்தந்தி 25 March 2018 4:46 AM IST (Updated: 25 March 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், நடிகர் ரஜினிகாந்த் படித்த அரசு தொடக்க பள்ளி நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு உள்ளது. புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை மத்திய மந்திரி அனந்தகுமார் நேற்று திறந்து வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூரு கவிபுரத்தில் பழமை வாய்ந்த அரசு தொடக்க பள்ளி உள்ளது. 1943-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தான் நடிகர் ரஜினிகாந்த் தொடக்க கல்வியை பயின்றார். இதனால் இந்த பள்ளிக்கு ‘ரஜினிகாந்த் பள்ளி‘ என்ற புனைப்பெயர் கிடைத்தது. காலப்போக்கில் முறையான பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் பள்ளி காணப்பட்டது. இதனால் பள்ளியை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்று கொண்டதோடு, கடந்த 2008-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா பள்ளியை புனரமைக்க ரூ.81 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் பள்ளிக்கான புனரமைப்பு பணி தொடர்ந்து தாமதப்பட்டு வந்தது. இதற்கிடையே, மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி அந்த பள்ளியானது கெம்பம்பூதி ஏரி அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இந்த நிலையில், பள்ளியின் கட்டிடத்தை நவீன முறையில் புனரமைப்பதற்காக பெங்களூரு வடக்கு தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான அனந்தகுமார், எம்.எல்.ஏ. ரவி சுப்பிரமணியா ஆகியோர் முறையே ரூ.25 லட்சம், ரூ.20 லட்சத்தை ஒதுக்கினர். மேலும், சில திட்டங்கள் மூலமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி கட்டிடம் சுமார் ரூ.1.50 கோடி செலவில் புனரமைக்கப்பட்டது.

அரசு மாதிரி தொடக்க பள்ளியாக புனரமைக்கப்பட்ட இந்த பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நவீன வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு உபகரணங்கள் உள்பட மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த பள்ளியின் கட்டிடத்தை நேற்று மத்திய மந்திரி அனந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அனந்தகுமாரை மாணவ- மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர். மாணவ- மாணவிகளுடன் அவர் கைகொடுத்து சகஜமாக உரையாடினார். 

Next Story