உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 25 March 2018 11:40 AM IST (Updated: 25 March 2018 11:40 AM IST)
t-max-icont-min-icon

அவள் கிராமத்து பெண். படிப்பறிவு அதிகம் இல்லாதவள். பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞனுக்கு அவளை திருமணம் செய்துவைத்தார்கள்.

வள் கிராமத்து பெண். படிப்பறிவு அதிகம் இல்லாதவள். பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞனுக்கு அவளை திருமணம் செய்துவைத்தார்கள். அவன் அந்த பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்திவந்தான். கடை வியாபாரம் போதுமான லாபத்தை தராததால், மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தான்.

அவனது தூரத்து உறவினர் ஒருவர் நகரத்தில் வசித்து வந்தார். நடுத்தர வயதான அவர் ஓரளவு படித்தவர், அனுபவமிக்கவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அவருக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. அதனால் வேலையை விட்டுவிட்டு, கிராமப் பகுதிக்கு சென்று குறைந்த விலைக்கு இடம் வாங்கி அதில் கோழிப் பண்ணை நடத்தலாம் என்ற எண்ணம் உருவானது. தனது உறவினரான இந்த இளைஞன் கிராமத்தில் வசிப்பது நினைவுக்கு வரவே, இவனை வந்து சந்தித்தார். இருவரும் கோழி வளர்ப்புத்தொழில் பற்றி ஆலோசித்தார்கள்.

அடுத்த ஒரு சில மாதங்களிலே இளைஞன் கடை நடத்திக்கொண்டிருந்த கிராமப் பகுதியில் அவர் சில ஏக்கர் நிலத்தை வாங்கினார். நிறைய கோழிகளை வளர்க்கத் தொடங்கினார். அந்த இளைஞனிடம், கடை வியாபாரத்தை நிறுத்திவிட்டு தன்னோடு வந்து அந்த தொழிலில் பார்ட்னராக சேர்ந்துகொள்ளும்படி கூறினார். அவனும், அவரோடு வந்து கோழி வளர்ப்புத் தொழிலில் கைகோர்த்தான்.

அவனும், அவனது மனைவியும் பெரும்பாலான நேரம் பண்ணையிலே உழைத்தார்கள். சில மாதங்களிலே அந்த தொழிலில் கணவனும், மனைவியும் கைதேர்ந்தவர்களாகிவிட்டார்கள். அந்த நடுத்தரவயது நகரத்து மனிதரோ அவ்வப்போது காரில் வந்து ‘விசிட்’ அடித்துவிட்டுச்செல்வார். அந்த தொழில் அவருக்கு அதிக லாபத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அந்த கிராமத்து பெண்ணுக்கு திருமணமாகி நாலைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவள் விரைவில் தாய்மைஅடைய வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள், தொழில் பார்ட்னரான அந்த நடுத்தர வயது மனிதர் ‘வெளிநாட்டில் உள்ள என் நண்பரின் நிறுவனத்திற்கு நம்பிக்கையான ஒரு ஆள் தேவைப்படுகிறார். அதனால் நீ வெளிநாட்டிற்கு போ. நீ அங்கு எந்நேரமும் ஏ.சி.யில் இருந்து வேலைபார்க்கலாம். அதிக சம்பளமும் கிடைக்கும். நீ அங்கிருந்து சம்பாதித்து அனுப்பும் பணத்தில் நாம் பண்ணையை மேலும் விரிவுபடுத்திவிடலாம். சில வருடங்கள் மட்டும் அங்கிருந்து வேலைபார்த்துவிட்டு இங்கே வந்துவிடு. அதுவரை உன் சார்பில் உன் மனைவி பண்ணையை கவனித்துக்கொள்ளட்டும்..’ என்று அந்த இளைஞனிடம் சொன்னார். அவன் காரணம் புரியாமல் தவித்தான்.

இளைஞனுக்கு மனைவியை பிரிந்து வெளிநாடு செல்ல மனமில்லை. மனைவிக்கும், கணவனை பிரிய விருப்பமில்லை. ஆனாலும் அவரோ, இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்பும் முடிவில் உறுதியாக இருந்தார். அதற்கான வேலைகளை மளமளவென செய்தார். அவரே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டு, பல்வேறுவிதமாக ஆசைகாட்டி அந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார்.

அவனை வெளிநாட்டிற்கு அனுப்பிய ஏஜெண்டும், அந்த நடுத்தர வயதுக்காரரும் நண்பர்கள். அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள். அன்று மது அருந்தும்போது ஏஜெண்ட், ‘தப்பா நினைச்சுக்காதீங்க.. உங்க தொழிலில் இருக்கும் நெளிவுசுழிவுகளை எல்லாம் கற்றுத்தேறிவிட்ட அந்த இளைஞனை ஏன், அதிரடியாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைச்சீங்க?’ என்று கேட்டார்.

மது போதையில் அந்த நடுத்தர வயதுக்காரர் அளித்த பதில் இது:

‘அந்த பொண்ணும், அவனும் நல்லா தொழிலை கத்துக்கிட்டாங்க.. அவங்களை நம்பித்தான் என் சம்பாத்தியமே இருக்குது. இந்த நிலையில அந்த பையனுக்கு தனியாக பண்ணை நடத்தலாம்ன்னு ஆசை வந்துடுச்சி. அந்த மாதிரி எதுவும் நடந்திடக்கூடாதுன்னுதான் அவனை வெளிநாட்டிற்கு அனுப்பியிருக்கேன். அங்கே டிப்டாப்பான வேலை. அந்த சொகுசுக்கு அடிமையாயிட்டா மீண்டும் இங்கே இந்த தொழிலுக்கு வரமாட்டான். எனக்கு போட்டியாக உருவாகமாட்டான்யா..’ என்றவர், அந்த இளைஞனின் மனைவியை பற்றி சொன்னது அடுத்த அதிரடி! அதையும் கேளுங்க..!

‘அவளுக்கு குழந்தை ஆசை வந்துடுச்சி. இப்போ இரண்டு பேரும் சேர்ந்திருந்து அவள் கர்ப்பம்தரிச்சிட கூடாது பாரு.. அவள் மாடு மாதிரி உழைக்கிறாள். கர்ப்பமாயிட்டால் வேலை பார்க்கமாட்டாள். குழந்தை பிறந்த பின்னாடியும் ஒண்ணு இரண்டு வருஷம் அவளால பண்ணைக்கு வரமுடியாது. அதை எல்லாம் கணக்குப்போட்டு பார்த்துட்டுதான்யா பணத்தை செலவு பண்ணி அவனை வெளிநாட்டுக்கு தள்ளிவிட்டுட்டேன்’ என்றார்.

நாட்டுல எப்படி எல்லாம் நடக்குது பாருங்க..!!

- உஷாரு வரும்.

Next Story