குழந்தைகளுக்கான புதிய ஆடைகள்


குழந்தைகளுக்கான புதிய ஆடைகள்
x
தினத்தந்தி 25 March 2018 12:44 PM IST (Updated: 25 March 2018 12:44 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.

குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. மாறிவரும் பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் விதமாக குழந்தைகளுக்கு அழகு சேர்க்கும் டிசைன்கள் எக்கச்சக்கமாக அணிவகுத்துக்கொண்டிருக்கின்றன. அவைகளுள் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஆடை தேர்வுக்கான சுவாரசியத்தை குறைத்துவிடும்.

குழந்தைகளுக்கு ஏற்ற விதவிதமான ஆடைகள் பற்றிய தொகுப்பு இது!

தற்போது வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் வாசகம் காண்போரை கணநேரமேனும் புன்னகை பூக்க வைக்கும்.

சிறுவர்-சிறுமியர் இருவருக்கும் நேர்கோடு மற்றும் கட்டம் போட்ட ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். அவைகளை எல்லா வகையான உடை களுக்கும் மேலாடையாக அணியமுடியும். மேலும் கழுத்து இல்லாத டி-சர்ட்டுகளும் அதிக அழகு தரும்.

ஆடைகளில் இடம்பிடிக்கும் வண்ணம்தான் குழந்தைகளின் அழகை மெருகேற்றும். அதனால் பல்வேறு வண்ண உடைகளை குழந்தைகளுக்கு அணிவித்துப் பாருங்கள். மேலாடை, கீழாடைக்கான வண்ணங்கள் ஒன்றோடொன்று பொருந்தும்விதமான டிசைன்கள் இருக்கட்டும்.

ஜீன்ஸ் தற்போது பல்வேறு ரகங்களில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு ஜீன்ஸ் ஆடைகள் வித்தியாசமான அழகைத்தரும்.

ஜம்ப்சூட்ஸ் ரக ஆடைகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருத்தமானது. இது பல டிசைன்களில் கிடைக்கிறது. ஜம்ப்சூட்ஸை பொறுத்தமட்டில் ‘டாப், பாட்டம், மேட்சிங்’ பற்றி கவலை கொள்ளவேண்டியதில்லை. விரும்பும் டிசைன்களை சுலபமாக தேர்ந்தெடுத்துவிடலாம்.

பெண் குழந்தைகளுக்கு இளவரசி தோற்றத்தை ஏற்படுத்தி தரக்கூடிய கவுன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ஒரே வண்ணம், பல டிசைன்கள் என எதிர்பார்க்கும் ரகங்களை கொண்டவையாக இருக்கின்றன. இந்தவகை ஆடைகளுக்கு பெரிதாக அணிகலன்கள் தேவையில்லை. இவை நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் ஆர்ப்பாட்டமற்ற அழகை அள்ளி வழங்கக்கூடியது. எடுப்பான, அட்டகாசமான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் குழந்தைகளுக்கு தாவணி, வேஷ்டி-சட்டை போன்ற கலாசார உடைகளை அணிவித்து அழகு பார்க்கலாம். நீங்களும் அத்தகைய ஆடைகளை அணியலாம். ஆயிரம் டிசைன்களில் ஆடைகள் இருந்தாலும் நம் பாரம்பரிய ஆடைகளுக்கு நிகர் ஏதுமில்லை.

அழகாக இருக்கிறது என்பதற்காக பாசி மணிகள், ஜிகினாக்கள், ஜிமிக்கி, அலங்கார கற்கள், ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை குழந்தை களுக்கு தேர்வு செய்யக்கூடாது. அவைகளை வாயில் வைத்து சப்பிவிடக்கூடும். சின்ன முத்துகள், கற்களை குழந்தைகள் தெரியாமல் விழுங்கிவிடவும் வாய்ப்புகள் உண்டு. அதனால் அழகை விட சவுகரியமான ஆடைகள் குழந்தைகளுக்கு ஏற்றது.

கொக்கிகள், சேப்டிபின், கழுத்தை இறுக்கும் வகையில் கயிறு, எலாஸ்டிக் போ‌ன்றவை இ‌ல்லாத ஆடைகளை தேர்ந்தெடுப்பதும் நல்லது.

குழந்தைகளின் உடலை உறுத்தாத வகையிலும் ஆடைகள் அமைந்திருக்க வேண்டும். குழந்தை களின் சருமம், வயது, தட்ப வெப்பநிலை போன்றவைகளை கருத்தில் கொண்டும் உடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

அழகிய டிசைன்களை கொண்ட ஆடைகளை தேர்வு செய்தாலும் அது காட்டன் ஆடைகளாக இருந்தால் குழந்தைகளுக்கு இதமாக இருக்கும். வியர்வையால் நனைந்தாலும் ஈரமாகாமல் குழந்தைகளை சளி தொல்லையில் இருந்து காக்கும்.

ஆடம்பரமாக காட்சியளிக்கவேண்டும் என்பதற்காக அதிக எடை கொண்ட ஆடைகளை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கான ஆடை மென்மையானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறந்தது.

Next Story