காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் 9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம்


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் 9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம்
x
தினத்தந்தி 26 March 2018 4:45 AM IST (Updated: 25 March 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் 9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து இருப்பது கண்துடைப்பு நாடகம். முத்தலாக் தடைசட்டம், நீட் தேர்வு, ஹஜ்பயணிகள் மானியம் ரத்து போன்றவற்றை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இது குறித்து கேட்டால் நீதிமன்ற உத்தரவு என்று கூறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.


காவிரி பகுதி அதிக பாசனபரப்பை கொண்டது. எனவே காவிரி நீரை பெற போராடும் உரிமை நமக்கு உள்ளது. ஆனால் இன்று காவிரி பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், எண்ணெய் எரிவாயு, நிலக்கரி எடுக்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துகிறார்கள். நாம் இன்று சோமாலியா நாட்டை பற்றி பேசுகிறோம். சோமாலியா நாடு ஒருகாலத்தில் இயற்கை வளம் நிறைந்த பகுதி. அங்கு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் சோமாலியா நாடு இன்று இந்த நிலையை எட்டி உள்ளது. இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. அது போல தமிழக ஆட்சியாளர்கள் சம்பாதித்தால் போதும் என்று உள்ளனர். இதே நிலை நீடித்தால் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே சோமாலியா நாடாக மாறும்.

பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். எதிர்காலத்தில் டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகளும் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகும். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் முன்பு அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டும்.


கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்த நேரத்தில் நாம் இதையும் செய்யாமல் விட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பது சாத்தியம் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் வாக்கு வங்கிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் காவிரி நீரை பெற போராட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குறுகிய நாட்கள் தான் உள்ளன. எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. அதன் பின்னர் எங்களின் செயல்பாடு முழுமையாக உங்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story