தனியார் தங்கும் விடுதியில் பெண் மர்மச் சாவு


தனியார் தங்கும் விடுதியில் பெண் மர்மச் சாவு
x
தினத்தந்தி 26 March 2018 4:00 AM IST (Updated: 26 March 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் கோவில் எதிரே தனியார் தங்கும் விடுதியில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் எதிரே பக்தர்கள் தங்கும் தனியார் விடுதிகள் ஏராளமானவை உள்ளது. இதில் பெரியபாளையம் கண்ணப்பநகரை சேர்ந்த பாண்டியன் (வயது 43) என்பவரது விடுதி உள்ளது. இதனை சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த வேல் (35) என்பவர் தனது மேற்பார்வையில் பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அனைத்து அறைகளையும் வேல் கழுவி சுத்தம் செய்தார். பின்னர் ஈரம் காய்வதற்காக அனைத்து அறை கதவுகளையும் திறந்து வைத்து விட்டு தனது அறைக்கு சென்று தூங்கி உள்ளார்.

இரவு அறை கதவுகளை பூட்டுவதற்காக வேல் சென்றார். அங்கு திறந்து வைத்திருந்த ஒரு அறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காது, மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக்காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த பெண் அந்த அறைக்கு எப்படி வந்தார்?. எப்போது வந்தார்? என்பது தெரியவில்லை.

உடனடியாக வேல் விடுதி உரிமையாளர் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், பெரியபாளையம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களையும், கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர், போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story